கொளுத்தும் வெயிலால் குட்டை போல் வறண்டது குண்டாறு அணை சுவரில் ராட்சத ஓட்டை-விவசாயிகள் அச்சம்

செங்கோட்டை :  கொளுத்தும் வெயிலால் செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு அணையானது தண்ணீரின்றி குட்டை போல் வறண்டுள்ளது. அணையின் பிரதான தடுப்புச் சுவரில் ராட்சத ஓட்டை விழுந்துள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே கடந்த 1983ம் ஆண்டு கட்டப்பட்ட குண்டாறு அணை 36  அடி கொள்ளளவு கொண்டது. இந்த  அணையின் மூலம் கண்ணுபுளி மெட்டு, இரட்டைகுளம், செங்கோட்டை, வல்லம் பகுதிகளில் உள்ள 12 குளங்கள் தண்ணீர் பெறுவதோடு சுமார் 1,122 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், 1000 ஏக்கர் விளை நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

 தென்காசி  மாவட்டத்திலேயே மிகவும் குறைந்த கொள்ளளவு கொண்ட இந்த குண்டாறு அணையானது, கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கு முன்னரே நிரம்பியது. தற்போது வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மேலாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அத்துடன் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே கோடை மழையும் சரிவர பெய்யவில்லை. அணைக்கு தண்ணீர் வரும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவுவதால் அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுபோனது. இதனால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து குண்டாறு அணையானது தற்போது தண்ணீரின்றி குட்டை போல் வறண்டுள்ளது.

குண்டாறு அணையின் தடுப்புச் சுவரில் ஒரு பகுதியில் கற்கள் பெயர்ந்து சரிந்து விழுந்தன. இதன் காரணமாக அணையின் பிரதான சுவரில் ராட்சத அளவில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள விவசாயிகள், அணையின் பாதுகாப்பு கருதி இது விஷயத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: