×

மண்டபம் அருகே அதிகாலையில் சோகம் டூவீலர் மீது கார் மோதி 4 பேர் பலி-நடைபயிற்சிக்குச் சென்ற ஓய்வு எஸ்ஐ.யும் உயிரிழந்த பரிதாபம்

ராமநாதபுரம் : மண்டபம் அருகே டூவீலர் - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நடைபயிற்சிக்கு சென்ற ஓய்வு சிறப்பு எஸ்ஐ உள்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் ஜெகன் (எ) முனீஸ்வரன் (37). சென்ட்ரிங் தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது உறவினரான, ஜெகதீஸ்வரன் (18) மற்றும் இவரது நண்பர் உமா மகேஸ்வரன் (42) இருவரும் மண்டபம் வனத்துறை அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் விற்பனையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இருவரையும் நேற்று அதிகாலையில் வேலைக்குச் செல்ல, ஜெகன் தனது டூவீலரில் ஏற்றிக்கொண்டு இறக்கி விடச் சென்றார்.

மரைக்காயர்பட்டணம் அருகே சென்றபோது, கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற கார், இவர்கள் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார், அப்பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்ட மண்டபம் முகாம் ஏ.கே.எஸ்.தோப்பு பகுதியில் வசிக்கும் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் சிறப்பு எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி (65) மீதும் மோதி கவிந்தது.

இந்த விபத்தில் ஜெகன், ஜெகதீஸ்வரன், உமா மகேஸ்வரன் ஆகியோருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காரில் வந்த 3 பெண், ஒரு சிறுமி உள்பட 5 பேர் லேசான காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர். விபத்து தொடர்பாக கோவை மேட்டுப்பாளையம் காரமடை பகுதியைச் சேர்ந்த டிரைவர் சம்பத்குமாரிடம் (21) மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தை ராமநாதபுரம் டிஐஜி மயில்வாகனன், எஸ்பி கார்த்திக், வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், கூடுதல் டிஎஸ்பி அருள், தேசிய நெடுஞ்சாலை கூடுதல் கோட்ட பொறியாளர் சதீஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது, டிஎஸ்பி ராஜூ ஆகியோர் பார்வையிட்டனர். ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது கூறுகையில், ‘‘தொலைதூரங்களில் இருந்து நீண்டநேரம் கண் விழித்து வாகனங்களை ஓட்டிவரும் போது எதிர்பாராவிதமாக சாலை விபத்து ஏற்படுகிறது. அதிகாலை நேரங்களில் ஏற்படும் இத்தகைய விபத்துகளை தவிர்க்க தொலைதூர வாகன ஓட்டிகள் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை ஓய்வு எடுத்து விட்டு பயணத்தை தொடரலாம்’’ என்றார்.

Tags : Ramanathapuram: Four people, including a retired SI, were killed in a head-on collision between a two-wheeler and a car near Mandapam.
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை