புஞ்சை புளியம்பட்டி அருகே பாம்பு, தேள், பூரான் பொம்மைகளை உடைத்து விநோத வழிபாடு-10 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்

சத்தியமங்கலம் : புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள அலங்காரிபாளையம் ஐயன் கோயிலில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் உருவ பொம்மைகளை உடைத்து வழிபடும் விநோத பண்டிகை நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காவிலிபாளையத்தை அடுத்த அலங்காரிபாளையத்தில் 200 ஆண்டு பழமை வாய்ந்த ஐயன்கோயில் உள்ளது.

இக்கோயிலில் உள்ள ஐயன், கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்களை ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வந்து விநோத வழிபாடு நடத்தும் மக்கள், பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் உருவ பொம்மைகளை உடைத்து சாமி கும்பிடுவர். சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை 7 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர். கோயில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகளில் பாம்பு, தேள், பூரான், பல்லி, சிலந்தி, கிராந்தி உள்ளிட்ட பல்வேறு வகை விஷ ஜந்துக்களின் உருவங்கள் மண்ணால் செய்யப்பட்டு 1 செட் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது.

பக்தர்கள் விஷ ஜந்து உருவங்களை வாங்கி ஐயன், கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்களை வழிபட்டு கோயில் முன்பகுதியில் கற்பூரம் ஏற்றி உருவங்களை உடைத்தனர். இவ்வாறு வழிபட்டால் வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் தென்படாது என்பது ஐதீகம்.ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மட்டுமின்றி கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்தும் நேற்று ஒரே நாளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று வந்து வழிபட்டு சென்றனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Stories: