×

ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. கோவிந்தசாமி நகர் மக்களுக்கு மயிலாப்பூர், மந்தைவெளியில் வீடுகள் : முதல்வர் அறிவிப்பு!!

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோவன் தெருவில் நீர் நிலைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளை கடந்த 29ம் தேதி முதல் நீதிமன்றம் உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று அதிகாரிகள் குடியிருப்புகளை இடிக்க முயன்றபோது, அதே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் வி.ஜி.கண்ணையன்(57) என்பவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இவர் இன்று காலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில்  சென்னை ஆர்.ஏ புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து  தீக்குளித்து உயிரிழந்த கண்ணையனின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர் செல்வம் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆர்.ஏ புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து  தீக்குளித்து உயிரிழந்த கண்ணையனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்  நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். சென்னை ஆர்.ஏ. புரத்தில் தீக்குளித்த சம்பவமே கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.ஆக்கிரமிப்பு அகற்றப்படும் அருகிலேயே மறுகுடியமர்வு இருந்தால் நன்றாக இருக்கும் என்று எம்.எல்.ஏக்கள் கூறினர். அதன்படி, மந்தவெளி, மயிலாப்பூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டி வரும் வீடுகளில், ஆர்.ஏ.புரம் மக்கள் மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள். ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து மறுகுடியமர்வு கொள்கை விரிவாக உருவாக்கப்படும். வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டிய தேவை ஏற்படின், மறு குடியேற்றம் தொடர்பாக முன்கூட்டியே சம்மந்தப்பட்ட மக்களுடன் கலந்தாலோசித்து, மறு குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றார்.

Tags : R.R. PA ,Puram Govindasamy Nagar ,Mayilapur ,Manthaipur ,Chief Minister , RA Puram, Firefighter, Govindasamy, Mylapore, Manthaiveli, Houses, Chief
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை