ஆப்கானில் பொது இடங்களில் பெண்கள் புர்கா அணிவதை தாலிபன் அரசு கட்டாயமாக்கியது குறித்து ஐ.நா.பொதுச் செயலாளர் கவலை!!

காபூல்: ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் புர்கா அணிவதை தாலிபன் அரசு கட்டாயமாக்கியது குறித்து ஐநா.பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டாரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க கூட்டு படைகள்  வெளியேறியதையடுத்து, தலிபான் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் பல்வேறு பெண் உரிமைகள் மறுக்கப்பட்டன. ஆனால் இம்முறை பெண்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என ஆரம்பத்தில் தலிபான்கள் கூறினார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிராக தங்களின் பழைய கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விதித்து வருகின்றனர். சில நாள்களுக்கு முன், 6ம் வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல தடை விதித்தனர். இந்த சம்பவத்திற்கு உலகின் பல்வேறு நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன. ஆப்கன் தலைநகர் காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க தலிபான்கள் தடை விதித்துள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில், ஆப்கானில் பெண்கள் பொது இடங்களில் தலையையும் உடம்பையும் முழுமையாக மறைக்கும் புர்கா உடை அணிய வேண்டும். பெண்கள் தங்களுடைய கண்களை தவிர்த்து முகத்தையும் மறைத்து கொள்ள வேண்டும். தேவை ஏற்பட்டால்தான் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். இந்த ஆணையை மீறி பெண்கள் யாராவது பொது இடத்தில் தங்கள் முகத்தை மறைக்காமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடைய தந்தை அல்லது நெருங்கிய உறவினருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ. நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டாரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆப்கானில்

 பெண்கள் பொது இடங்களில் முகத்தை மறைக்க வேண்டும் என்றும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் தலிபான்கள் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அளித்த வாக்குறுதிகளையும், சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கீழ் தலிபான்கள் தங்கள் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: