தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான அசானி புயல் கரையை தொடும் முன்பு வலுவிழக்கும் :வானிலை ஆய்வு மையம்

சென்னை :  தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான அசானி புயல் கரையை தொடும் முன்பு வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒடிசா, மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அசானி புயல் நேற்று மாலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக மாறி தென் கிழக்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்தது. வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல், வடக்கு ஆந்திர கடற்கரையை நெருங்குவதற்கு முன் வடகிழக்கு திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10ம் தேதிக்கு பின்னர், கடலிலேயே அசானி புயல் வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பினும் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் முன்னெச்சரிக்கையாக கொல்கத்தாவில் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே ஒடிசாவில் சில மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.  

Related Stories: