×

அண்ணனின் சொகுசு பங்களாவில் கரன்ட் கட்டாகுதா? : சீமானுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

சென்னை :தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சனை உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டி இருந்த நிலையில், இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்துள்ள பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மின்வெட்டு விவகாரத்தை விமர்சிக்கும் வகையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் திமுகவின் ஓராண்டு சாதனையை பார்க்கலாம் என்றால் மின்சாரம் இல்லையே என விமர்சித்து இருந்தார்.

இதற்கு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரிலேயே பதில் அளித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு உண்மையிலேயே மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன் என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இதனிடையே செந்தில் பாலாஜி கருத்துக்குப் பதில் கொடுக்கும் வகையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜிக்கு! அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற குடிசையில அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்! என்று சுளீர் பதில் அளித்திருந்தார்.

சீமானின் இந்த கருத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே! விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு. அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்! என்று பதில் அளித்துள்ளார். மின்வெட்டு தொடர்பாக ஆரம்பித்த விவாதத்தில் இருவரும் காராசார கருத்துகளை பதிவிட்டது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Senthil Balaji ,Seeman , Seeman, Senthil Balaji, Question
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட...