×

நூல் விலை உயர்வை கண்டித்து பனியன் நிறுவனங்கள் மே 16, 17ல் ஸ்டிரைக்

திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதி 2  நாட்கள் பனியன் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழில் துறையினரின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஞ்சு விலை கடும் உச்சத்தில் இருக்கும் நிலையில், மாதந்தோறும் நூல் விலையானது வரலாறு காணாத அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பின்னலாடை உற்பத்திக்கு பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் நூல், கிலோ ரூ.440 என உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.400 என்ற அளவில் இருந்த நூல் விலையானது மே மாத தொடக்கத்தில் கிலோவுக்கு ரூ.40 உயர்ந்தது. இதனால், பருத்தி நூலை நம்பி தொழில் செய்து வரும் பல்வேறு மாவட்ட தொழில் துறையினர் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், நூல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதிலிருந்து மீள்வது குறித்து திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் மாவட்ட தொழில் துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில், எம்பிக்கள் சுப்பராயன், நடராஜன், சண்முகசுந்தரம்,  ஜோதிமணி, கணேசமூர்த்தி, மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல், சைமா சங்கத்தலைவர் வைக்கிங் ஈஸ்வரன், நிட்மா சங்கத்தலைவர் அகில் ரத்தினசாமி, டீமா சங்கத் தலைவர் முத்துரத்தினம் உப்பட கோவை மற்றும் திருப்பூர், ஈரோடு பகுதியை சேர்ந்த தொழில் துறையினர் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நூல் ஏற்றுமதியை இடைக்காலமாக ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும். பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். நூல் இறக்குமதிக்கு வரியை நீக்க வேண்டும். பஞ்சு மற்றும் நூலை அத்தியாவசிய பொருட்களுக்கான பட்டியலில் சேர்க்க வேண்டும். மே மாதத்தில் உயர்த்தப்பட்ட நூல் விலை கிலோ ரூ.40ஐ பஞ்சாலைகள் ரத்து செய்ய  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நூல் விலை உயர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க மே 16 முதல் 21ம் தேதி வரை பனியன் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம் செய்ய ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது திருப்பூரில் மே 16, 17 தேதிகளில் 2 நாட்கள் மட்டும் முழு உற்பத்தி நிறுத்தம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. பிற மாவட்ட தொழில் அமைப்புகள் உற்பத்தி நிறுத்தம் குறித்து ஓரிரு நாட்களில் முடிவு அறிவிப்பதாக தெரிவித்தன.

Tags : Banyan companies strike on May 16, 17 in protest of rising yarn prices
× RELATED யானை தாக்கி விவசாயி பலி