66வது பொதுக்குழு நடந்தது கடன் வாங்கி கட்டிடம் கட்ட நடிகர் சங்கம் முடிவு: விஷால் தகவல்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை சவுகார் ஜானகி கவுரவிக்கப்பட்டார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தலைவர் நாசர், துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் சிவகுமார், நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விஷால் கூறுகையில், ‘நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடம் 70 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக கட்டி முடிப்பதற்கு இன்னும் 30 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதற்கான நிதியை எப்படி திரட்டுவது என்று ஆலோசித்து வருகிறோம். தனிப்பட்ட முறையில் நடிகர், நடிகைகளிடம் நன்கொடை கேட்க திட்டமிட்டுள்ளோம். அதுபோல், வங்கியில் கடன் பெறவும் ஒப்புதல் வாங்கியுள்ளோம். இன்னும் 3 ஆண்டுகள் நாங்கள் பதவியில் இருப்போம். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தோம். பாரதி விஷ்ணுவர்தன், ராதிகா சரத்குமார் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர். நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும்’ என்றார்.

Related Stories: