×

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் உயர்கல்வி பயில அரசுப்பள்ளி மாணவர்கள் விவரம் 13ம் தேதிக்குள் பதிவேற்ற உத்தரவு: சிஇஓக்களுக்கு சுற்றறிக்கை

வேலூர்: அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் உயர்கல்வி பயில எமிஸ் இணையதளத்தில் விவரங்களை 13ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு, சமக்ரா சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் சிஇஓக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து சமக்ரா சிக்‌ஷா திட்ட இயக்குநர் சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட தகவல்கள் தேவை.  

ஒவ்வொரு மாணவருக்கும் தேவையான ஆவணங்களை தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றுவதற்கு வசதியாக எமிஸ் இணையதளத்தில் ஒரு தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் சரிபார்க்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள மாணவர்களின் விவரங்களைப் புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணியை வரும் 13ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பள்ளி மாணவர்களின் விவரங்கள் நிலுவையில் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதற்கான பணிகளில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்  7.5 சதவீதம் இடங்கள் வழங்கப்படுகிறது. 2021-2022 கல்வியாண்டில் இருந்து  பல்கலைக்கழகங்கள், சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் மற்றும் அரசு  கல்லூரிகள், மருத்துவம், பொறியியல்,  வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டப் பட்டப் படிப்புகளில் அரசுப்  பள்ளி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government Higher Secondary Students , Order to upload details of higher education public school students with 7.5 per cent reservation by 13th: Circular to CEOs
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி