×

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

கோவை: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.5.59 கோடியில் முடிவுற்ற 9 பணிகள், ரூ.49.62 கோடியில் 263 புதிய திட்டப்பணிகளின் துவக்க விழா நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தனர். பின்னர், அமைச்சர்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்ட வாலாங்குளம் உள்பட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைதொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: கோவை, மதுரை, சென்னையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆலை அமைக்கப்படவுள்ளது. கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்தது தொடர்பாக ஒருநபர் கமிஷன் ஆய்வு செய்து வருகிறது. தற்போது செய்யாத பணிகளை செய்ததாக ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக 2 அதிகாரிகள், ஒரு ஒப்பந்ததாரர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது போன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Coimbatore ,Minister ,KN Nehru , Action against officials involved in malpractice in Coimbatore Smart City project: Minister KN Nehru
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...