×

பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை மீண்டும் அச்சுறுத்தும் காலிஸ்தான் கோஷம்: உள்ளூர் தாதா, கூலிப் படைகள் பேரம்; உளவுத்துறைகளிடம் சிக்கிய ஆதாரம்

பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகள், ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளுடன் ரகசியமாக கைகோர்த்து செயல்படுகின்றன. கடந்த காலங்களில் இவை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, அந்த அமைப்புகள் தற்போது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டு உள்ளன. இந்தியாவை துண்டாட துடிக்கும் இதுபோன்ற தீவிரவாத அமைப்புகள், அண்டை நாட்டில் மட்டுமல்ல. வடகிழக்கு மாநிலங்களில் இப்போதும் கூட உயிருடன் உள்ளன. ஆனால், ஒன்றிய, மாநில அரசு பாதுகாப்பு அமைப்புகளின் கடுமையான நடவடிக்கைகளால், அமைதிப் பேச்சுவார்த்தை மூலமாக அவற்றின் வீரியம் குறைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் உத்வேகத்துடன் செயல்பட்டு  வந்த நக்சலைட் அமைப்புகளும், பாதுகாப்பு சிறப்பு படைகளின் நடவடிக்கையால் முடக்கப்பட்டு உள்ளன.
இதுபோன்ற நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்ட ‘காலிஸ்தான்’ என்ற தீவிரவாத அமைப்பு, சமீப காலமாக உயிர் பெற்று வருகிறது. கனடா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் செயல்படும் சீக்கிய அமைப்புகளின் ஆதரவுடன் இந்த பூகம்பம் கிளம்புகிறது. அதற்கு வேண்டிய உதவிகளை செய்து, தூபம் போட்டு வருகிறது பாகிஸ்தான் .உளவுத்துறையான ஐஎஸ்ஐ.

இதன் காரணமாக, சமீப காலமாக டெல்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேச மாநிலங்களில் காலிஸ்தான் கோஷம்  அதிகமாகி வருகிறது. மேலும், பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டுகளுடன் சிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களின்  எண்ணி்க்கையும் அதிகமாகி இருக்கிறது. அரியானாவில் கடந்த வாரம் சிக்கிய 4  காலிஸ்தான் ஆதரவாளர்களிடம் இருந்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள், நவீன துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் 4 பேரும் ஐஎஸ்ஐ உளவுத்துறையின் ஆதரவுடன் இதை கடத்தி வந்துள்ளனர். இந்த ஆயுதங்கள் அனைத்தும், பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலமாக எல்லை  தாண்டி வந்து வீசப்பட்டு, இவர்களுக்கு கிடைத்துள்ளது.  பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லை கிராமங்களில் சமீப காலமாக  ஆயுதங்களை சுமந்து வரும் டிரோன்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதும், அவற்றை பாதுகாப்பு படைகள் துரத்துவதும், சுட்டு வீழ்த்துவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், நேற்றும் கூட சண்டிகரில் பஞ்சாப் போலீசாரிடம் சிக்கிய 2 காலிஸ்தான் ஆதரவாளர்களிடம் இருந்து 1.5 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து சிக்கியுள்ளது. இரும்பு பெட்டியில் அடைக்கப்பட்டு, தாக்குதல் நடத்துவதற்கான தயார்நிலையில் இது கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அவர்கள் சிக்கியதின் மூலம், முக்கிய நகரங்களில் நடத்தப்பட இருந்த பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், இமாச்சல பிரதேச சட்டப்பேரவையின் வாயில் கேட்களில் நேற்று காலிஸ்தான் அமைப்பின் கொடி கட்டப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் ஓராண்டு காலம் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் மூலமாகதான், காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளிப்படையாக மீண்டும் வெளியே வரத் தொடங்கி இருக்கின்றனர். டெல்லி செங்கோட்டை தாக்குதல் மூலம் அவர்களின் வெறித்தனமும் அம்பலமாகி இருக்கிறது. இந்தியாவில் நடக்கும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளின் போராட்டம், செயல்பாடு  ஆகிய எல்லாவற்றுக்கும் பின்னணியில் அமெரிக்காவில் இருந்து செயல்படும் ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற அமைப்பு இருப்பதை இந்திய உளவுத்துறைகளும், பாதுகாப்பு படைகளும் கண்டறிந்து உள்ளன.

இந்த அமைப்புக்கும், ஐஎஸ்ஐ.க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமீபத்தில் இந்த அமைப்பு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்,  ‘காலிஸ்தான் அமைப்பின் செயல்பாட்டை ஒடுக்கும் வகையில் தடைகளை விதித்தால்,  இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மாநில அரசுகள் மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்,’ என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஹர்ஜிந்தர் சிங் ரிண்டா என்பவனே, தற்போது இந்தியாவில் நடக்கும் காலிஸ்தான் ஆதரவு சதிகளுக்கு மூளையாக செயல்பட்டு வருகிறான். அரியானாவில் சமீபத்தில் சிக்கிய 4 பேரில் ஒருவனான ரஜ்பீர் சிங், இவனுக்கு நெருக்கமானவன். இவனின் உத்தரவின் பேரிலேயே, ஐஎஸ்ஐ உதவியுடன் அரியானாவில் இருந்து டெல்லிக்கு ஆயுதங்களை கடத்திச் செல்ல முயன்று இருக்கிறான்.

வெளிநாடுகளில் இருந்து தீவிரவாதிகளை அழைத்து வந்து, இந்தியாவில் சதிச் செயல்களில் ஈடுபடுத்த முடியாது என்பதை ஐஎஸ்ஐ உணர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவை சேர்ந்தவர்களையே அதிகளவில் ஊக்குவித்து, தாக்குதல்களுக்கு தயார்படுத்தி வருகிறது. இதில் ஒருபடி மேலே போய்,  பெரிய நகரங்களில் நாசச் செயல்களில் ஈடுபடுத்த உள்ளூர் தாதா கும்பல்கள், கூலிப்படைகளையும் பேரம் பேசி வருகிறது. பணத்துக்காக எதையும் செய்யும் தயாராக இருக்கும் இந்த கும்பல்கள், சொந்த நாட்டுக்கே துரோகம் இழைக்கும் ஸ்லீப்பர் செல்களாக,  தாக்குதல்களுக்கு தயாராகி வருகின்றன. ஒன்றிய, மாநில பாதுகாப்பு படைகளுக்கும், உளவுத்துறைகளுக்கும் இவர்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து இருக்கின்றனர்.

* இமாச்சல் சட்டப்பேரவை வாசலில் காலிஸ்தான் கொடி: விசாரணைக்கு முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவு
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை வாசலில் மர்ம நபர்கள் காலிஸ்தான் கொடியை பறக்க விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் உள்ள  சட்டப்பேரவையின் பிரதான வாயிற்கதவுகள், சுற்றுச்சுவரில் மர்ம நபர்கள் காலிஸ்தான் கொடிகளை கட்டி உள்ளனர். பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு அல்லது நேற்று அதிகாலையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. காலிஸ்தான் கொடிகளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தினர்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெய்ராம் தாக்குர் வெளியிட்ட அறிக்கையில்,  ‘இரவோடு இரவாக, தர்மசாலாவில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் காலிஸ்தான் கொடியை கட்டி சென்ற கோழைத்தனமான சம்பவத்தை கண்டிக்கிறேன். இங்கு, குளிர்கால கூட்டத்தொடர் மட்டுமே நடக்கிறது.  இச்சம்பவம் மூலம் இப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது. பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி, கோழைகள் இச்செயலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, விரிவான விசாரணை நடத்தி. குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்,’ என்று தெரிவித்துள்ளார்.

* ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சட்டபேரவைக்கே பாதுகாப்பு அளிக்க இயலாத அரசால், தேசத்தில் உள்ள மக்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க முடியும்? இது இமாச்சலின் மரியாதை, தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது,’ என்று தெரிவித்துள்ளார்.

* பஞ்சாப் தனி நாடு
‘எஸ்எப்ஜே’ எனப்படும் ‘சீக்கியர்கள் நீதி’ அமைப்பு, அமெரி்க்காவில் இருந்து செயல்பட்ட போதிலும் இன்னும் அதற்கு தடை விதிக்கப்படவில்லை. இந்தியாவில் இருந்து பஞ்சாப்பை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இதன் செயல்பாடுகள் தற்போது உலகளவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags : Khalistan , Khalistan slogan threatening Pakistani intelligence again in the background: Local Dada, mercenary bargain; Evidence entangled with intelligence
× RELATED விவசாயிகள் ஆயுதங்களை எடுக்க வேண்டும்...