இந்து, முஸ்லிம்கள் உட்பட அனைத்து சமூகத்திலும் சராசரி கருவுறுதல் விகிதம் சரிவு: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

புதுடெல்லி: நாட்டில் அனைத்து முக்கிய சமூகத்தை சேர்ந்த பெண்களும் அவர்களின் குழந்தை பெறும் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1992-93ம் ஆண்டு முதல், நாட்டின் திட்டமிடலுக்கான கொள்கைகளை வகுப்பதற்காக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2015-16ல் 4வது ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், கடந்த 2019-21 இடையே 2 ஆண்டுகளில் 5வது ஆய்வு நடத்தி, அதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இதில், நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.2ல் இருந்து 2.0 ஆக சரிந்துள்ளது. இது, ஒரு பெண் சராசரியாக எத்தனை குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார் என்ற எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படுகிறது. கடந்த 1992-93 முதல் தற்போது வரை சராசரி கருவுறுதல் விகிதம் 40% சரிந்துள்ளது. இது, 3.4ல் இருந்து 2.0 ஆக குறைந்துள்ளது.

இதே போல அனைத்து சமூகங்களிலும் பெண்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதிகபட்சமாக முஸ்லிம் பெண்களின் கருவுறுதல் விகிதம் 4வது ஆய்வைக் காட்டிலும் 9.9 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது, 2.62ல் இருந்த இந்த எண்ணிக்கை 2.36 ஆக குறைந்துள்ளது. ஆனாலும், சராசரி கருவுறுதல் விகிதத்தில் மற்ற சமூகங்களைக் காட்டிலும் முஸ்லிம்கள் தொடர்ந்து முதல் இடத்திலேயே உள்ளனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கடந்த 1992-93ல் இருந்து முஸ்லிம்களின் சராசரி கருவுறுதல் விகிதம் 46.5 சதவீதமும், இந்துக்கள் விகிதம் 41.2 சதவீதமாகவும் குறைந்து முதல் 2 இடத்தில் உள்ளனர். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் 3வது இடத்தில் உள்ளனர். சராசரி கருவுறுதல் விகிதம் சரிவானது, பெண்கள் படிப்பறிவை பெறுவதை காட்டுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகம்    5ம் ஆய்வு     4ம் ஆய்வு     3ம் ஆய்வு    2ம் ஆய்வு    முதல் ஆய்வு    சராசரி

விகிதம் (%)

இந்து    1.94    2.13    2.59    2.78    3.3    -41.2

முஸ்லிம்    2.36    2.62    3.4    3.59    4.41    -46.5

கிறிஸ்தவர்    1.88    1.99    2.34    2.44    2.87    -34.5

சீக்கியர்     1.61    1.58    1.95    2.26    2.43    -33.7

இந்தியா    2    2.2    2.7    2.9    3.4    -41

Related Stories: