×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஜெபர் சாம்பியன்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெற்ற மியூச்சுவா மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் (வயது 28, 14வது ரேங்க்) மோதிய ஆன்ஸ் ஜெபர் (27 வயது, 10வது ரேங்க்) 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் அபாரமாக விளையாடி ஜெபரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த பெகுலா 6-0 என வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது. எனினும், 3வது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய ஜெபர் 7-5, 0-6, 6-2 என்ற செட் கணக்கில் 1 மணி, 54 நிமிடம் போராடி வென்று முதல் முறையாக டபுள்யுடிஏ 1000 அந்தஸ்து தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

* அல்கராஸ் - ஸ்வெரவ் மோதல்
மாட்ரிட் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் சவாலை எதிர்கொள்கிறார். அரையிறுதியில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சுடன் (செர்பியா) மோதிய அல்கராஸ் (18 வயது) 6-7 (5-7), 7-5, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 3 மணி, 35 நிமிடம் கடுமையாகப் போராடி வென்றார். இவர் காலிறுதியில் நட்சத்திர வீரர் ரபேல் நடாலை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு அரையிறுதியில் கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதிய ஸ்வெரவ் 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார்.

Tags : Madrid Open Tennis ,Jeffer Champion , Madrid Open Tennis: Jeffer Champion
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ் அல்கராஸ் சாம்பியன்