காங். ஆட்சி தான் ஏழைகளுக்கானது: ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: தொடர்ந்து அதிகரித்து வரும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு குறித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, `காங்கிரஸ் ஆட்சியே ஏழைகள், நடுத்தர மக்களின் நலனுக்கானது,’ என்று தெரிவித்தார். சர்வதேச எரிபொருள் விலை உயர்வினால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலைநேற்று முன்தினம் முதல் ரூ.50 அதிகரித்துள்ளது. இதனால், டெல்லியில் மானிய விலையிலான எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.999.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 6 வார கால இடைவெளியில் சிலிண்டர் விலை 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலிண்டர் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், `காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2014ம் ஆண்டில், ரூ.827 ஆக இருந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய விலையில் ரூ.410க்கு கொடுக்கப்பட்டது. பாஜ தலைமையிலான ஆட்சியில் 2022ம் ஆண்டில், அதே சிலிண்டர் மானியம் இன்றி ரூ.999 ஆக விற்பனையாகிறது. அப்போது, 2 சிலிண்டர் வாங்கிய விலையில் தற்போது ஒரு சிலிண்டர் மட்டுமே வாங்க முடிகிறது. காங்கிரஸ் ஆட்சியே நாட்டின் ஏழைகள், நடுத்தர மக்களின் நலனுக்கானது. அது, நமது பொருளாதார கொள்கையின் அடிப்படையாகும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: