×

மாங்காடு அருகே பரபரப்பு பழைய பொருட்கள் சேகரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து: அடுத்தடுத்துள்ள 3 குடோன்களும் எரியத்தொடங்கியது

குன்றத்தூர்:  மாங்காடு பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (43). இவருக்கு மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் வண்டலூர் மீஞ்சூர் புறவழிச்சாலை அருகே சொந்தமாக குடோன் உள்ளது. சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கம்பெனிகளில் சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு வந்து, தரம்பிரித்து குவித்துவைக்கும் பணி இங்கு நடைபெறும். இந்நிலையில், நேற்று இங்கு இருந்த பிளாஸ்டிக்குடோன் ஒன்றில் திடீரென தீ பற்றிக்கொண்டது. தொடர்ந்து தீயானது கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. கரும்புகை விண்ணை முட்டும் அளவிற்கு இருந்ததால் அங்கிருந்த குடியிருப்புவாசிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

தக்வலறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பூந்தமல்லி, விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக்நகர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து ஐந்து வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ அருகில் இருந்த மற்ற இரண்டு குடோன்களுக்கும் பரவியது. இதனால் அடுத்தடுத்த 3 குடோன்களும் ஒரே நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் செய்வதறியாது உறைந்து போயினர்.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்த வேளையில், அந்த பகுதி இளைஞர்களும், பொதுமக்களும், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து தீயை அணைக்க முயன்றனர். இதனால் ஒரு வழியாக மூன்று மணி நேரம் போராட்டத்திற்குப்பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அம்பத்தூர் காவல் துணை ஆணையாளர் மகேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். மேலும் விபத்து குறித்த காரணங்களை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : Mankadu , Terrible fire at a godown collecting godown near Mankadu: 3 consecutive godowns started burning.
× RELATED பாலியல் தொல்லையால் மாங்காடு பள்ளி...