×

ராஜா அண்ணாமலைபுரத்தில் பரபரப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பாமக நிர்வாகி தீக்குளிப்பு: கண்ணாடிகள் உடைத்து, போலீசார் மீது கற்கள் வீசியதால் பரபரப்பு

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்க அதிகாரிகள் இயந்திரங்களுடன் வந்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிர்வாகி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோவன் தெருவில் நீர் நிலைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளை கடந்த 29ம் தேதி முதல் நீதிமன்றம் உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள குடும்பத்தினருக்கு பெரும்பாக்கம் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இதே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வருவதால் இந்த பகுதியிலேயே இடம் வேண்டும் என்றும் கூறி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருந்தாலும், நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு பகுதிகள் இடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று காலை போலீசார் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இயந்திரங்களுடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அதையும் மீறி அதிகாரிகள் குடியிருப்புகளை இடிக்க முயன்றனர். அப்போது, அதே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் வி.ஜி.கண்ணையன்(57) என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் அதிகாரிகள் வீட்டை இடிக்க முயன்றதால் திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் தீ பிடித்து எரிந்த கண்ணையனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒருவர் தீக்குளித்ததால் அப்பகுதி மக்கள் போலீசாரை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அதை தடுக்க வந்த போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியும், இயந்திரத்தின் கண்ணாடிகளை உடைத்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உயர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஏதேனும் பிரச்னை ஏற்படாமல் இருக்க 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டள்ளது.

இதற்கிடையே தீக்காயமடைந்த கண்ணையன் உடலில் 90 விழுக்காடு காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீக்குளித்த கண்ணையன் பாமக தென் சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார். இவருக்கு சக்தி(54) என்ற மனைவியும், சுரேஷ்(38) என்ற மகன், கலையரசி(36) என்ற மகளும் உள்ளனர். கண்ணையன் வீடு கட்டுவதற்கான கட்டுமான பொருட்கள் விற்பனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* முதியவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு ராமதாஸ் வேண்டுகோள்
பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவில், ‘‘சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில்  பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீடுகள் வருவாய்த்துறையினரால் இடிக்கப்படுவதைக் கண்டித்து கண்ணையா என்ற ஏழை தீக்குளித்த  செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். பூர்வகுடிகளை சென்னையை விட்டு வெளியேற்றுவது மனித உரிமை மீறல்; அதை அனுமதிக்க முடியாது. தீக்குளித்த  கண்ணையாவுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.

Tags : Pamaka ,Raja Annamalaipuram , Pamaka administrator sets fire to Raja Annamalaipuram protest against demolition of houses
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்