குப்பையை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு நோட்டீஸ் மற்றும் 15 நாட்கள் காலக்கெடு வழங்கிய பிறகே அபராதம் விதிக்கப்படும்: மாநகராட்சி மேயர் பிரியா தகவல்

சென்னை: கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 ஆயிரத்து 385 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. கே.கே.நகர் சிவன் பூங்காவில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர், மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் முதல் தவணை தடுப்பூசியை 99 % பேர் செலுத்தியுள்ளனர். 2ம் தவணையை 84 % பேர் செலுத்தியுள்ளனர். இதில் 9 லட்சம் பேர் 2ம்  தவணை செலுத்தவில்லை. 15-17 வயதுக்கு உட்பட்டோரில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 77 பேர் என 87 % தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 12-14 வயதினருக்கு முதல் தவணை 41 % செலுத்தப்பட்டுள்ளது. மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரிக்காமல் வழங்குவோருக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, 15 நாள் காலக்கெடு வழங்கப்படும். அதன் பிறகும் குப்பையை தரம் பிரித்து தரவில்லை, என்றால் அபராதம் விதிக்கப்படும். முதலிலேயே அபராதம் விதிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது: சென்னையில் 8 தெருவில் 3 முதல் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டலம் 5, 6 மற்றும் மெரினாவில் தனியார் நிறுவனங்களால் மாநகராட்சி கழிவறைகள் பராமரிக்கப்படுவதற்கு 8 ஆண்டுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விமான நிலைய  கழிவறைகள் போல தூய்மையாக பராமரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதர மண்டல கழிவறைகளும் பராமரிப்பு பணிகளுக்காக பின்னர் தனியார் நிறுவனங்களிடம் வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. சென்னை மாநகராட்சி மண்டல எண்ணிக்கையை 23ஆக உயர்த்துவதற்கான பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவடையும். மண்டல எண்ணிக்கை அதிகரித்தாலும் வார்டுகளின்  எண்ணிக்கை அதிகரிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: