எதிர்காலத்தில் அதிமுக எனது தலைமையில் இயங்கும்: வி.கே.சசிகலா அதிரடி பேட்டி

சென்னை: அதிமுக கட்சி எதிர்காலத்தில் தனது தலைமையில் தான் இயங்கும் என்று சசிகலா உறுதிபட கூறினார். மீஞ்சூர் அடுத்த வாயலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற சித்தர்கள் கூடும் சித்திரை திருவிழாவில் வி.கே.சசிகலா கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட சசிகலா சித்தர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். செய்தியாளர்களிடம்  சசிகலா கூறியதாவது: எதிர்காலம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். அதிமுகவிற்கு தலைமை ஏற்பேன். எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் என்னுடைய தொண்டர்கள் தான். கவலைப்படும் அளவில் ஒன்றும் இல்லை. அனைத்தும் நல்லபடியாக நடக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அப்போதைக்கு நல்ல முடிவு எடுக்கப்படும். ஓராண்டு திமுக ஆட்சி சாதனை என முதல்வர் கூறி கொள்ளலாம்.

மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம். மக்களை பொறுத்தவரையில் இந்த ஓராண்டு ஆட்சியில் திருப்தியாக இல்லை. கடந்த ஓராண்டு ஆட்சியில் மக்கள் மட்டுமல்லாது கடவுளுக்கும் பிரச்னை, கஷ்டம் தான். கோயில் விவகாரங்களில் அரசு தலையிடுவது நல்லதல்ல. அறநிலையத்துறை அமைச்சராக இருந்தால் மட்டும் போதாது நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். திராவிட மாடல் எனக்கூறி ஆட்சி நடத்திக்கொள்ளலாம்.

ஆனால் கோயில் நடைமுறைகளை அரசு மாற்றக்கூடாது. ஓராண்டு கால ஆட்சி என்பது சாதனையல்ல வேதனைதான்.

கோயில்களுக்கு உள்ளே சென்று அரசியல் செய்ய வேண்டாம். நிலக்கரி தொடர்பாக முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் முரண்பட்ட கருத்துக்களை கூறிவருகின்றனர். விளம்பரம் மட்டுமே ஆட்சியை கொடுத்துவிடாது.மக்களை திருப்தியாக வைத்திருக்க வேண்டும் அனைத்தையும் சரிசெய்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு இலவச பேருந்து என அறிவித்துள்ள நிலையில் வேலைக்கு செல்லும் நேரத்தில் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுறும் பெண்கள் குறைந்த கட்டணத்திலாவது சரியான நேரத்திற்கு பேருந்துகளை இயக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: