×

தென்னை விவசாயிகள் கொப்பரை தேங்காய் கொள்முதல் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு

சென்னை: வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால், கொப்பரை தேங்காய் விலை மிகவும் குறைந்திருந்தது. இதனால், விலை ஆதரவு திட்டத்தின் கீழ், அரவை கொப்பரைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. 50,000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலினையும் ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களிலுள்ள 42 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி 2,221 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், கொப்பரை தேங்காய் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைந்துள்ளது. இத்தருணத்தில் மாநில அரசு எடுத்துவரும் முயற்சியை நன்கு பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி, அரவை கொப்பரைக்கு ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோவுக்கு ரூ.105.90 பெறலாம். எனவே, கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து, கொப்பரை தேங்காயை விற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் கொப்பரை தேங்காய்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியான கொள்முதல் செய்யப்படும் என்பதால், நன்கு உலர வைத்து, சுத்தமான கொப்பரைகளை தரம்பிரித்து கொள்முதலுக்கு கொண்டு வர வேண்டும். கொப்பரை தேங்காய்க்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் அனுப்பி வைக்கப்படும். தற்போது, தேங்காய்க்கான விலையும் வெளிச் சந்தையில் குறைந்துள்ளதால், கொப்பரை தேங்காய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தென்னை விவசாயிகள் அனைவரும், மாநில அரசு எடுத்துள்ள இந்த கொப்பரை தேங்காய் கொள்முதல் திட்டத்தில் இணைந்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Copra ,Minister ,MRK ,Panneerselvam , Coconut farmers can avail of the Copra Coconut Purchase Scheme: Minister MRK Panneerselvam
× RELATED ₹3 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்