×

ஆந்திரா - ஒடிசா கரை நோக்கி நகர்கிறது தீவிர புயலாக மாறியது அசானி: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் நீடித்து வரும் நிலையில் வங்கக்கடலில் அசானி புயல் உருவாகியுள்ளது. இது வட ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதால், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும். மத்திய வங்கக்கடல் பகுதியில்  இன்றும் நாளையும் 115 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 தமிழகத்தில் கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அதன்தொடர்ச்சியாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அதிகபட்சமாக நேற்று, திருச்சி, மதுரை, ஈரோடு, வேலூர், திருத்தணி பகுதிகளில் 106 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை வெயில் நிலவியது.

இதற்கிடையே, வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தம் மெல்ல மெல்ல வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியது. அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று நேற்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த அந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தீவிரப்புயலாக மாறியது. அந்த தீவிரப்புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை(10ம் தேதி) வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு  வங்கக்கடல் பகுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நகர்வின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இ டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.  டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

வங்கக் கடலில் புயல் இருப்பதை அடுத்து சென்னை எண்ணூர், புதுச்சேரி, உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1, 2, மற்றும் 3 ஏற்றப்பட்டுள்ளன. இது தவிர மத்திய வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 105 கிமீ வேகம் முதல் 115 கிமீ வேகத்தில் வீசுவதுடன் இடையிடையே 125 கிமீ வேகத்திலும் இன்று காற்று வீசும். நாளையும் மத்திய மேற்கு வங்க் கடல் மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 105 கிமீ வேகத்திலும் இடையிடையே 115 கிமீ வேகத்திலும் வீசும். அதனால் இன்றும் நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டா மென்ற எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆழ் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக  கரை திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

* மத்திய வங்கக்கடல் பகுதியில்  இன்றும்  நாளையும் 115 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
* தீவிரப்புயல் மேலும் வடமேற்கு திசையில்  நகர்ந்து நாளை மாலை வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய  மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு  வங்கக்கடல் பகுதிக்கு செல்லும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* சென்னை எண்ணூர், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1, 2, மற்றும் 3 ஏற்றப்பட்டுள்ளன.

Tags : Andhra Pradesh ,Odisha ,Asani ,Tamil Nadu , Asani moves towards Andhra Pradesh-Odisha coast turns into severe storm: Heavy rains expected in 11 districts
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி