×

குமரி கடலோர தடுப்பு சுவர் பணிகளுக்கான பாறாங்கற்கள் கேரளாவுக்கு கடத்தல்: அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை

நித்திரவிளை: குமரி மாவட்ட கடலோர பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய பாறாங்கற்களை கேரளாவுக்கு கொண்டு சென்றது எப்படி? என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிமங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் சோதனை சாவடிகளில் தற்போது தீவிர சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 5  டிப்பர் லாரிகள் கடலரிப்பு மற்றும் அலை தடுப்பு சுவர் பணிக்கு பயன்படுத்தப்படும் பாறாங்கற்களை ஏற்றிக் கொண்டு நீரோடியை கடந்து கேரளா செல்ல முயன்றது.

நீரோடி சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் சந்தேகமடைந்து லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது நித்திரவிளை அடுத்த வள்ளவிளை மீனவ கிராமத்தில் கடலரிப்பு பணிக்கு பாறாங்கல் ஏற்றிக் கொண்டு வருவதற்கான அனுமதி இருந்தது. விசாரணையில் வள்ளவிளையில் கற்களை இறக்காமல், கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. உடனே சோதனை சாவடி போலீசார் கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், எஸ்.ஐ. ஜெயக்குமார் மற்றும் போலீசார் 5 லாரிகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். லாரிகளை ஓட்டி வந்தவர்கள் கொற்றிக்கோடு பகுதியை சேர்ந்த ஜெப விக்டர் (42), குழித்துறை பழவார் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (35), புதுக்கடை வேங்கோடு பகுதியை சேர்ந்த ஷிஜின் (27), பள்ளியாடி எரியன்விளையை சேர்ந்த மகாதேவன் (45), களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியை சேர்ந்த விபின் (30) என தெரிய வந்தது.

போலீசார் டிரைவர்கள் மீது கனிமங்களை திருடி சட்டவிரோதமாக கடத்துவதாக வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை பகுதியில் பல பகுதிகளில்  கடலரிப்பு தடுப்பு சுவர், அலை தடுப்பு சுவர் மற்றும் துறைமுக விரிவாக்க  பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பாறாங்கற்களுக்கு அனுமதி வாங்கி விட்டு, அவற்றை ரகசியமாக கேரளாவுக்கு கடத்துவதாக ஏற்கனவே புகார் எழுந்திருந்த நிலையில், தற்போது 5 டாரஸ் லாரிகள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பணிகளுக்காக அனுமதி பெற்று விட்டு, கேரளாவுக்கு கற்களை கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் கடலரிப்பு தடுப்பு கோட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Keralah ,Kumari , Smuggling of boulders for Kumari Coastal Wall works to Kerala: Request for authorities to conduct investigation
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து