×

களைகட்டுகிறது திற்பரப்பு அருவி

குலசேகரம்: அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் நீர்நிலை சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கின்றனர். இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. தொடர்ச்சியான வெயில் காரணமாக நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளது. இருப்பினும் சில வாரங்களாக பெய்த கோடை மழை காரணமாக தற்போது திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவு கூட்டமாக வந்து மிதமாக கொட்டும் அருவியில் நீராடி மகிழ்கின்றனர். விடுமுறை நாட்களில் இந்த கூட்டம் இன்னும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நேரத்தில் சிறுவர் நீச்சல் குளத்தில் சுற்றுலா பயணிகள் இறங்கி உற்சாக குளியல் போட்டு மகிழ்கின்றனர். இதேபோன்று அருவியின் மேல் பகுதியில் உள்ள திற்பரப்பு தடுப்பு அணையிலும் கூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து வருகின்றனர். அப்போது கோதையாற்றின் இருகரையிலும் உள்ள இயற்கை எழில் மிக காட்சிகளையும் கண்டு ரசித்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக வெயில் காலங்களுக்கு ஏற்ற நுங்கு மற்றும் பழ வகைகள் விற்பனை செய்யும் தற்காலிக கடைகளும் ஏராளமான முளைத்துள்ளன. இங்கு வியாபாரம் களை கட்டியது. இதேபோல் மாத்தூர் தொட்டி பாலத்திலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நேற்றும், இன்றும் காலை முதலே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்ததால் தொட்டி பாலம் களைகட்டியுள்ளது.

Tags : Tirprappu Falls , Weeding Tirprappu Falls
× RELATED திற்பரப்பு அருவியில் 9 மாதங்களுக்கு...