பெற்றோர் உடல்நலம் பாதித்ததால் மாணவிக்கு காதணி விழா நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள்: கடலாடியில் நெகிழ்ச்சி சம்பவம்

சாயல்குடி: உடல் நிலை பாதிக்கப்பட்ட சூழலில், மாணவிக்கு ஆசிரியைகள் நடத்திய காதணி விழா நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலக்கடலாடியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமையாசிரியர், 5 ஆசிரியைகள், 2 ஆசிரியர்கள் உள்ளனர். இங்கு கடலாடி இந்திரா நகரை சேர்ந்த லெட்சுமணன், பூமாதேவி தம்பதியின் மகள் ஆர்த்தி 1ம் வகுப்பு படித்து வருகிறார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட தந்தை, மனநலம் பாதிக்கப்பட்ட தாய் என்பதால் ஆர்த்தி, தாத்தா, பாட்டி வளர்ப்பில் வறுமையான சூழலில் வாழ்ந்து வருகிறார்.

இந்தாண்டு பள்ளியில் சேர்ந்த ஆர்த்திக்கு 5 வயது பூர்த்தியாகியும் காது குத்தவில்லை என்பதை ஆசிரியர்கள் அறிந்தனர். இதையடுத்து பெற்றோர், தாத்தா, பாட்டியுடன் கலந்து பேசி, காதணி விழா நடத்த தலைமையாசிரியர் சற்பிரசாத மேரி மற்றும் ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் காது குத்து விழா நடந்தது. பட்டு, தேங்காய், பழம் அடங்கிய சீர்வரிசை பொருட்களை ஆசிரியைகள் கொண்டு வந்தனர். தொடர்ந்து ஆசிரியர் ஒருவர் மடியில் ஆர்த்தியை அமர வைத்து தங்க தோடுகளை அணிவித்து, அனைத்து மாணவர்களின் பெற்றோர், கிராமத்தினர் முன்னிலையில் காதணி விழா நடத்தப்பட்டது. பிறகு கிராம மக்களுக்கு சைவம், அசைவ உணவுகளுடன் விருந்து உபசரிப்பும் நடந்தது.

ஏழை மாணவிக்கு தங்களது சொந்த செலவில் காதணி விழா நடத்தி, விருந்து வைத்த சம்பவம் கடலாடி பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: