கள்ளக்காதலுக்கு இடையூறு: கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள சின்னக்கரை லட்சுமி நகரில் கொடைக்கானலை சேர்ந்த கோபால் (35) கடந்த 2 நாட்களுக்கு முன்பு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கோபால் கடந்த 10 வருடங்களாக பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும், மனைவி சுசீலா மற்றும் 10 வயதான மகன் மற்றும் 7 வயதான மகளுடன் வசித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கோபாலை கொன்ற கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணையில், கோபாலை அவரது மனைவி சுசீலாவே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சுசீலாவுக்கும் பல்லடம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

இதையறிந்த கோபால், மனைவி மற்றும் மாரீஸ்வரனை எச்சரித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கோபாலை கொலை செய்ய சுசீலாவும், மாரீஸ்வரனும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி மாரீஸ்வரன் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மதன்குமார், மணிகண்டன் மற்றும் கூலிப்படையினர் வினோத், லோகேஸ்வரன், விஜய் ஆகியோருடன் கோபாலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று கோபால் பைக்கில் சென்றபோது அவரை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது எங்கள் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுசீலா உள்பட 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

Related Stories: