×

தூத்துக்குடி இளம்பெண் கொலை: கைதானவர்கள் பகீர் வாக்குமூலம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே கருங்குளத்தை அடுத்த தாதன்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (42). இவரது முதல் மனைவி காளியம்மாளின் மகள் மீனா (21). காளியம்மாள் இறந்ததையடுத்து முப்பிடாதி (40) என்பவரை சுடலைமுத்து திருமணம் செய்தார். அவர் மூலம் மாயாண்டி (20) என்ற மகன் உள்ளார். மீனாவிற்கு கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிப்பாண்டி என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு மகன் உள்ளார். குடும்பத் தகராறு காரணமாக அவரை பிரிந்த மீனா, பெற்றோரின் சொல்லை கேட்காமல், நெல்லை மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த முத்து என்பவரை 2வதாக திருமணம் செய்தார்.

இது சுடலைமுத்து மற்றும் உறவினர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தாதன்குளத்தில் நடந்த கோயில் கொடை விழாவுக்கு சித்தி பார்வதி வீட்டுக்கு வந்த மீனா கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மீனாவின் தந்தை சுடலைமுத்து, அவரது 2வது மனைவி முப்பிடாதி, தம்பி மாயாண்டி, உறவினரான தளவாய் மனைவி வீரம்மாள் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான வீரம்மாள் மகன் முருகனை தேடி வருகின்றனர்.

கைதான சுடலைமுத்து உள்ளிட்ட 4 பேர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: மீனா, 2வதாக நாங்குநேரியைச் சேர்ந்த முத்து என்பவரை திருமணம் செய்தாள். இது எங்களுக்கு தாமதமாகத் தான் தெரியவந்தது. இதை நாங்கள் கண்டித்தோம். முதல் கணவரும், குழந்தையும் இருக்கும் போது, மீனா இவ்வாறு செய்தது, குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதற்கிடையே மீனா பேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இன்னொரு வாலிபரிடம் பழகி வருவதை கேள்விப்பட்டோம்.

ஏற்கனவே கேவலப்படுத்தியது போதாது என்று, இன்னும் குடும்பத்தை கேவலப்படுத்த நினைக்கிறாளே என்று எண்ணி, கொடை விழாவுக்கு சித்தி வீட்டுக்கு வந்ததையறிந்து, அவளிடம் தட்டிக் கேட்பதற்காக சென்றோம். அப்போது மீனா, தனது தவறை உணராமல், எங்களை அவமானப்படுத்துவது போல் பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றோம். போலீசார் எங்களை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர்கள் 4 பேரும் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Bakir , Thoothukudi teen murder: Arrest of Pakir confession
× RELATED உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பும்,...