திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாராந்திர சேவைகள் ரத்து

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் இரவுவரை 76 ஆயிரத்து 324 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 38 ஆயிரத்து 710 பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் ரூ4.73 கோடியை காணிக்கையாக செலுத்தினர். இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 23 அறைகளில் பக்தர்கள் காத்திருந்து 6 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏழுமலையான் கோயிலில் வாரம்தோறும் நடக்கும் வாராந்திர சேவைகளான அஷ்டதள பாதபத்ம ஆராதனை, திருப்பாவாடா, நிஜபாத தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு தடை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேற்று மத பிரசாரங்களை குறிக்கும் விதமான படங்கள், துண்டு பிரசுரங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் மற்றும் நடிகைகளின் புகைப்படங்கள், கட்சி கொடிகள் திருமலைக்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த நடைமுறை உள்ளது.

சில பக்தர்கள் இதையறியாமல் தங்கள் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்தும், ஸ்டிக்கர் ஒட்டியும் வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய வாகனங்களை அலிபிரி சோதனைச்சாவடியில் உள்ள தேவஸ்தான பாதுகாவலர்கள் நிறுத்தி, அதுபற்றி பக்தர்களுக்கு தெரிவித்து அகற்றி வருகின்றனர்.

Related Stories: