×

மலர் கண்காட்சிக்கான அலங்கார பணிகளை அடுத்த வாரம் துவக்க திட்டம்

ஊட்டி: கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சியானது 20ம் தேதி துவங்க உள்ளதால் அதற்கான அலங்கார பணிகளை அடுத்த வாரம் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கோடை காலத்தின் போது, குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவது வழக்கம். இவர்களை மகிழ்விப்பதற்காகவும், சுற்றுலாவை மேம்பாடுத்துவதற்காகவும் ஆண்டு தோறும் மே மாதத்தில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனைக் காண வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கிறனர்.

இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி வரும் 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை ஐந்து நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கிறது. இந்தாண்டு மலர் கண்காட்சிக்காக 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. டேலியா, கிராந்தியம், பால்சம், இசியாட்டிக் லில்லி, பல்வேறு வகையான மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, சால்வியா ரெணுகுலாஸ் போன்ற மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பல வகையான லில்லியம் மலர்களும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மலர்கள் தற்போது பூத்துக் குலுங்கும் நிலையில், மலர் கண்காட்சிக்காக மாடங்களில் பூந்தொட்டிகள் அடுக்கும் பணிகள் மற்றும் புதிய கார்டனில் அலங்கார பணிகள் அடுத்த வாரம் துவக்கப்பட உள்ளது. மேலும், பல்வேறு மலர் அலங்காரங்களும் மேற்க்கொள்ளப்படவுள்ளது. பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனால், புல் மைதானம் பச்சை கம்பளம் விரித்தார் போல் பசுமையாக காட்சியளிக்கிறது. மலர் கண்காட்சி தினத்தன்று சுற்றுலா பயணிகள் புல் மைதானத்திற்குள் அனுமதிக்கபடுவார்கள். மலர் கண்காட்சியை முன்னிட்டு கொய்மலர்களை கொண்டு அலங்காரங்களும் மேற்க்கொள்ளப்படுகிறது. மலர் அலங்காரங்கள் குறித்த தகவல்கள் ஓரிரு நாட்களில் தோட்டக்கலைத்துறை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Flower exhibition, decorative work, project
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை