காரைக்குடியை தன்னிறைவு பெற்ற நகராட்சியாக உயர்த்துவதே இலக்கு: நகர்மன்ற தலைவர் பேச்சு

காரைக்குடி: காரைக்குடி நகராட்சி முத்துபட்டணம் பகுதியில் புதிய தாய்சேய் நல மையம் கட்டிட பூமிபூஜை நடந்தது. நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். நகர்மன்ற தலைவர் முத்துத்துரை தலைமை வகித்தார். துணை தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கட்டிட பணிகளை துவக்கி வைத்து நகர்மன்ற தலைவர் முத்துத்துரை பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதார திட்டங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இந்நகராட்சி பகுதியில் தொற்றுநோய் பரவாத வகையில் குப்பைகள் அகற்ற தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கழிவுநீர் வரத்து கால்வாய்களில் உள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. தவிர குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டமும், உரம் தயாரிக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெற வசதியாக பாரதிநகர், முத்துபட்டணம் பகுதியில் ரூ.50 லட்சத்தில் இரண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய தாய்சேய் நல மையம் துவங்கப்பட உள்ளது.

நகராட்சியின் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்றுவதை இலக்காக கொண்டு செயல்படுகிறோம்’ என்றார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் துரை நாகராஜன், கண்ணன், மெய்யர், கலா, சித்திக், முதுநிலை ஒப்பந்தகாரர் நாதன், முன்னாள் நகர இளைஞரணி காரை சுரேஷ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சன் சுப்பையா, பழனியப்பன், ராஜேந்திரன், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: