×

வார விடுமுறையை கொண்டாட: குளுகுளு கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப்பயணிகள்

கொடைக்கானல்: வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு வார விடுமுறை காரணமாக, நேற்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நகர் பகுதி நுழைவிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நேற்று போக்குவரத்து பாதித்தது.

மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஏரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், கொடைக்கானலில் நேற்று காலை முதலே இதமான சூழல் நிலவியது. இந்த சூழலில் தூண்பாறை பகுதியில் தவழும் மேகமூட்டங்களையும் சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசித்தனர்.

கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் கூடும் சுற்றுலாப்பயணிகளால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதுபோல், வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாததால் பார்க்கிங் வசதியை ேமம்படுத்த வேண்டும் என சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரிஜம் ஏரிப்பகுதிக்கு செல்ல சிறப்பு வாகனம்
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியை காண்பதற்கு, சுற்றுலாப்பயணிகள் தங்களது வாகனங்களில் செல்ல வனத்துறை அலுவலகத்தில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. குறைந்த அளவிலான வாகனங்களுக்கு மட்டுமே இங்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் பேரிஜம் ஏரி பகுதியை கண்டு ரசிப்பதற்கு வனத்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

மோயர் பாயிண்ட் பகுதியில் வனத்துறையினர் தங்களது வாகனங்களில் சுற்றுலாப்பயணிகளை பேரிஜம் ஏரி பகுதிக்கு அழைத்துச் சென்று திரும்பி அதே பகுதியில் கொண்டு வந்துவிடுகின்றனர். நபர் ஒன்றுக்கு ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Kullu Kodaikanal , Weekend Getaways, Kodaikanal, Tourists
× RELATED வார விடுமுறையை கொண்டாட குளுகுளு...