இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்து வந்தது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக கொரோனா தடுப்பூசிபோடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியது. அந்தவகையில் தமிழகத்தில் நேற்றையை நிலவரப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 44 லட்சத்து 19 ஆயிரத்து 528 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 4 கோடியே 51 லட்சத்து 43 ஆயிரத்து 974 பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். அதேபோல் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 15 லட்சத்து 11 ஆயிரத்து 205 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 7 லட்சத்து 21 ஆயிரத்து 743 பேர் 2வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

இந்த நிலையில் தடுப்பூசி போட தகுதியானவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் தமிழகத்தில் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, இன்று 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் முதல் தவணை மற்றும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய தகுதியானவர்களை கண்டறிந்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நினைவூட்டல் சீட்டு வழங்கப்பட்டது. இந்தச் சீட்டில், தடுப்பூசி போட தகுதியானவர்களுக்கு அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

இதன் மூலம் தகுதியானவர்கள் தடுப்பூசி போட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாநகராட்சி ஊழியர்கள், போலீசார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், இந்திய மருத்துவ சங்கத்தினர், மக்களை தேடி மருத்துவம் குழுவினர் மற்றும் தெற்கு ரயில்வே சார்ந்த அதிகாரிகள், ஊழியர்களை ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுக்கள் தடுப்பூசி போட தகுதியானவர்களின் விவரங்களை கண்டறிந்து, அவர்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. அந்தவகையில் சென்னையில் மட்டும் இன்று 3 ஆயிரத்து 300 முகாம்கள் நடத்தப்படுகிறது.

இதற்காக 1,600 குழுக்கள் அமைக்கப்பட்டு, வார்டுக்கு ஒரு முகாம் என 200 நிலையான முகாம்களும், மீதமுள்ள 1,400 குழுக்கள், 3,100 இடங்களில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு சென்ற மக்கள் பலர், தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.

Related Stories: