×

கேரள மாநிலத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் தக்காளி வைரஸ் காய்ச்சல்: 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் உறுதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் புதியவகை வைரஸ் காய்ச்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் 5 வயதிற்கும் குறைவான குழந்தைகள் பலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடல்வலி, கைகால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் எனப்படும் புதியவகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வைரஸ் வேகமாக பரவிவரும் ஆரியங்காவு, நெடுவதூர் ஆகிய பகுதிகளில் கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். கொல்லம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இதே அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த காய்ச்சல் கொசுக்கடியால் பரவும் சிக்கன்குன்யாவின் பின்விளைவாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். தக்காளி காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். நோய்தடுப்பு நடவடிக்கையாக தக்காளி காய்ச்சல் பரவி வரும் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.      


Tags : Kerala , Tomato virus outbreak among children in Kerala: Tomato virus confirmed in 85 children
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...