×

நைட் ரைடர்சை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்

புனே: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 75 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீசியது. லக்னோ தொடக்க வீரர்களாக டி காக், கே.எல்.ராகுல் களமிறங்கினர். ராகுல் ஒரு பந்தை கூட சந்திக்காமலேயே பரிதாபமாக ரன் அவுட்டானார். அடுத்து டி காக் - தீபக் ஹூடா இணைந்து 2வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர். டி காக் 50 ரன் (29 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெளியேறினார். ஹூடா 41 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), க்ருணால் 25 ரன் எடுத்து (27 பந்து, 2 பவுண்டரி) ரஸ்ஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஸ்டாய்னிஸ் 28 ரன் (14 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஹோல்டர் 13 ரன் (4 பந்து, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

மாவி வீசிய 19வது ஓவரில் இவர்கள் 5 இமாலய சிக்சர்களைத் தூக்கியது குறிப்பிடத்தக்கது. கடைசி பந்தில் சமீரா (0) ரன் அவுட்டாக, லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. ஆயுஷ் பதோனி 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் ரஸ்ஸல் 2, சவுத்தீ, மாவி, நரைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நைட் ரைடர்ஸ் 14.3 ஓவரில் 101 ரன் எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்து, 75 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ரசல் அதிகபட்சமாக 45 ரன் விளாசினார் (19 பந்து, 3  பவுண்டரி, 5 சிக்சர்), சுனில் நரைன் 22 ரன், ஆரோன் பின்ச் 14 ரன் எடுத்தனர். லக்னோ பந்துவீச்சில் அவேஷ் கான், ஹோல்டர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

Tags : Lucknow Super Giants ,Knight Riders , Lucknow Super Giants defeated Knight Riders
× RELATED வான்கடே மைதானத்தில் இன்றிரவு...