உலக சுகாதார அமைப்பின் கூற்று ஆதாரமற்றது இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி: சுகாதார அமைச்சர்கள் கண்டனம்

கேவடியா: ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல கவுன்சிலின் 14வது மாநாடு குஜராத் மாநிலத்தின் கேவடியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுகாதார துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் இந்தியாவில் கொரோனா தொற்றினால் 47லட்சம் பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாநாட்டில் பேசிய பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுகாதார துறை அமைச்சர்கள், ‘இந்தியாவில் அனைத்து கொரோனா இறப்புக்களும் சட்டப்பூர்வ செயல்முறையை பின்பற்றி வெளிப்படையாக பதிவு செய்யப்படுகின்றது.  

எனவே உலக சுகாதார அமைப்பு கூறுவதை ஏற்க முடியாது’ என்று தெரிவித்தனர். தொடர்ந்து இந்தியாவில் கொரோனா இறப்புக்கள் குறித்த உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இது தொடர்பாக சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ‘‘கொரோனா மரணங்கள் குறித்த எங்களது எண்ணிக்கை மதிப்பீட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கொரோனா தடுப்பு நிர்வாகத்தில் சிறப்பாக செயல்படும் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகும்’’ என்றார்.

3,805 பேருக்கு தொற்று

* நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் புதிதாக 3,805 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,98,743 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர். மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 5,24,024 ஆக உயர்ந்துள்ளது.

* நாடு முழுவதும் மொத்தம் 20,303 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 190 கோடி டோஸ் கடந்துள்ளது.

Related Stories: