வடக்கு எல்லையில் சீனா அத்துமீறுகிறது: ராஜ்நாத் சிங் பகீர் தகவல்

புதுடெல்லி: ‘வடக்கு எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது’ என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். கடந்த 2020ம் ஆண்டு மே 5ம் தேதி கிழக்கு லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதே போல் சீன தரப்பிலும் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், எல்லை சாலைகள் அமைப்பின் 63வது எழுச்சி தினம் நேற்று  நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘அதிகளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எல்லையில் கட்டுமான அமைப்பை பலப்படுத்த வேண்டும். எல்லை பகுதிகளை மேம்படுத்துவதற்கு எல்லை சாலைகள் அமைப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு முயற்சி செய்து வருகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக இரவு, பகலாக பணியில் இருந்து வரும் பாதுகாப்பு படையினருக்கு அதிக சலுகைகள் வழங்குவதற்கு அரசு முன்னுரிமை கொடுக்கும். சமீப காலமாக வடக்கு எல்லையில் சீனாவின் நடவடிக்கை அதிகரித்துள்ளது.

மலை பகுதிகளில் கட்டுமானங்களை மேற்கொள்வதில் சீனர்கள் கைதேர்ந்தவர்கள். இதனால், அவர்களால் பல்வேறு பகுதிகளுக்கு விரைந்து செல்ல முடிகிறது’’ என்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக, லடாக்கின் சுசுல் கவுன்சிலரான கோன்சோக் ஸ்டான்சின் தனது டிவிட்டரில், ‘பங்கோங் ஏரியில் பாலம் கட்டும் பணிகளை முடித்த சீனா, ஹாட்ஸ்பிரிங் பகுதியில் 3 செல்போன் கோபுரங்களை நிறுவி உள்ளது. இது இந்திய பகுதிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது’ என கூறியிருந்தார். தற்போது இதை ஒப்புக் கொள்ளும் வகையில் ராஜ்நாத் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: