ஜெய்ஸ்வால், ஹெட்மயர் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட் செய்தது. பேர்ஸ்டோ, தவான் இருவரும் பஞ்சாப் இன்னிங்சை தொடங்கினர். தவான் 12 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் பட்லர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பானுகா ராஜபக்ச 27 ரன் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் கிளீன் போல்டானார்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோ அரை சதம் அடித்தார். கேப்டன் மயாங்க் அகர்வால் 15 ரன், பேர்ஸ்டோ 56 ரன் (40 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சாஹல் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பஞ்சாப் திடீர் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், ஜிதேஷ் ஷர்மா - லிவிங்ஸ்டன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தனர். லிவிங்ஸ்டன் 22 ரன் (14 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பிரசித் கிருஷ்ணா வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. ஜிதேஷ் 38 ரன் (18 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ரிஷி தவான் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் சாஹல் 3, அஷ்வின், பிரசித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் துரத்தலை தொடங்கினர். எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிறிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4 ஓவரில் 46 ரன் சேர்த்தது. பட்லர் 30 ரன் (16 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரபாடா வேகத்தில் பானுகா வசம் பிடிபட்டார். அடுத்து ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்தார். வழக்கம்போல அதிரடியில் இறங்கிய சாம்சன் 23 ரன் (12 பந்து, 4 பவுண்டரி) விளாசி ரிஷி பந்துவீச்சில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜெய்ஸ்வால் - படிக்கல் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்க்க, ராஜஸ்தான் ஸ்கோர் சீராக உயர்ந்தது. 33 பந்தில் அரை சதம் அடித்த ஜெய்ஸ்வால் 68 ரன் (41 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் பந்துவீச்சில் லிவிங்ஸ்டனிடம் பிடிபட்டார். ஒரு முனையில் படிக்கல் நிதானமாக விளையாட, பஞ்சாப் பந்துவீச்சை பதம் பார்த்த ஹெட்மயர் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டார். படிக்கல் 31 ரன் (32 பந்து, 3 பவுண்டரி) எடுத்து அர்ஷ்தீப் பந்துவீச்சில் அகர்வாலிடம் பிடிபட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ஹெட்மயர் 31 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), பராக் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: