×

7வது ஊதியக்குழு சம்பளத்தை விரைவில் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: 7வது ஊதியக்குழு சம்பளத்தை பொறியாளர்களுக்கு விரைவில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தின் 65வது பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் சு.கண்ணன் தலைமை வகித்தார். திருச்சி வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளரும் சங்கத்தின் தேர்தல் குழு தலைவருமான கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 500 பொறியாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு: இந்திய நாட்டில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிட அல்லும் பகலும் அயராது உழைத்திடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று இன்று (நேற்று)டன் ஓராண்டு நிறைவு செய்துள்ளதை எண்ணி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இதற்காக தமிழக அரசிற்கு இப்பொதுக்குழு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. தமிழக வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்களிப்பினையும் பொறியாளர்களின் அர்ப்பணிப்பையும் நன்கு அறிந்திருந்த கலைஞர், பொறியாளர்கள் அனைவருக்கும் 2010ம் ஆண்டு ஊதியத்தை உயர்த்தி வழங்கினார். கலைஞர் வழங்கிய ஊதியத்தை அதன் பின்னால் அமைந்த அரசு குறைத்து வழங்கியது.

அரசு அலுவலர்கள் அனைவரும் 7வது ஊதியக்குழு பயன்களைப் பெற்று வரும் நிலையில் பொறியாளர்கள் மட்டும் இன்றும் 6வது ஊதியக்குழு ஊதியமே பெற்று வருகிறோம். எனவே, கலைஞர் வழங்கிய ஊதியத்தின் அடிப்படையில் 7வது ஊதியக்குழு ஊதியத்தை பொறியாளர்களுக்கு விரைவில் வழங்கிட வலியுறுத்துகிறோம். 1.4.2003 முதல் பணியில் சேர்ந்த அலுவலர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து, விரைவில் அனைத்து அலுவலர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி ஆணை வழங்க தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் 75வது ஆண்டு பவள விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து 75வது ஆண்டு பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்தும், விழா மலர் மற்றும் பல்வேறு சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டதும் ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பவள விழா நிகழ்ச்சியை தலைமையேற்று சிறப்பாக நடத்தி தந்த அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Highways Engineers Association ,Government of Tamil Nadu , 7th Pay Commission Salary should be paid soon: Highways Engineers Association urges Government of Tamil Nadu
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...