வேதகிரீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் உற்சவம்: பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்

சென்னை: திருக்கழுக்குன்றத்தில் அறுபத்து மூவர் உற்சவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பட்சி தீர்த்தம், வேதமலை என்று அழைக்கப்படுகின்ற திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திப்பெற்ற வேதகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் சிவத்தலங்களில் முக்கியத் தலமாக விளங்குவதால் வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பெரும்பாலானோர் வந்து வேதகிரீஸ்வரரை வணங்கி செல்கின்றனர்.

இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 11ம் நாள் சித்திரை திருவிழா மிகவும் விமரிசையுடன் நடப்பது வழக்கம். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த சித்திரை திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், இந்தாண்டு சித்திரை திருவிழா நடத்துவதற்காக முடிவுசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, 11 நாள் திருவிழாவின் முதல் நாளான 5ம் தேதி வியாழக்கிழமை காலை வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மீது ‘‘ஓம் நமச்சிவாய” என்ற கோஷம் முழங்க அதிகாலை 5.30 மணியளவில் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து திருவிழாவின் 3ம் நாளான நேற்று காலை அறுபத்து மூவர் உற்சவம் நடந்தது. இதில் அப்பர் சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்மந்தர் உட்பட 63 நாயன்மார்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். அவர், அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் அமர்ந்து அக்ரகார வீதி, அடிவார வீதி, கிரிவலப்பாதை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த உற்சவத்தை காண திருக்கழுக்குன்றம் மற்றும் பல்வேறு வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இதில் 63 நாயன்மார்களை வணங்கி தரிசித்து சென்றனர்.

Related Stories: