எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும்: திமுக எம்எல்ஏ எஸ்.சந்திரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று நிதித்துறை, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, மனிதவள மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திருத்தணி தொகுதி உறுப்பினர் எஸ்.சந்திரன் (திமுக) பேசியதாவது: நீட் தேர்விற்கு எதிரான மிகப் பெரிய போராட்டத்தை முதல்வர் எடுத்திருக்கின்றார். அவரது குறிக்கோள் நீட், கியூட்  இரண்டையும் மியூட் செய்வதே முதல்வரின் லட்சிய பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை, ரூ.3 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தித் தர கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோன்று, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.25,000 வழங்கப்படுகின்றது. அவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு, தயவுசெய்து அதனை ரூ.50,000 ஆக உயர்த்தித் தர வேண்டும். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கிடையே ஆண்டுதோறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்துவதைப் போன்று கயிறு இழுக்கும் போட்டி, கபடி போட்டி போன்ற போட்டிகளை எல்லாம் நடத்தி பரிசளிக்க வேண்டும். திருத்தணி நகரத்திலே ஒரு அலங்கார வளைவு அமைக்க வேண்டும்.

திருக்கோயிலுக்கு இரண்டாவது மலைப் பாதை, பள்ளிப்பட்டிலே மகளிர் கல்லூரி, பள்ளிப்பட்டில் ஒரு பேருந்து பணிமனை, ராக்கிப்பேட்டையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுகிறேன். திருத்தணி தொகுதிக்கு ஒரு தொழிற்பூங்காவும், ஜவுளிப் பூங்காவும், பைபாஸ் ரிங் ரோடு போன்றவைகளை அமைத்துத் தர வேண்டும். இந்த ஆட்சியில் காவல் துறை ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக செயல்படுகிறது. இந்த ஆட்சியில், பெண் காவலர்கள் இன்றைக்கு கால் கடுக்க சாலையில் நிற்க வைக்கப்படுவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: