×

தேவரியம்பாக்கம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியை சுற்றி தொண்டங்குளம், உள்ளாவூர், வரதாபுரம், அளவூர், தாழயம்பட்டு, வளாகம் உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் இந்த கிராமத்தை சுற்றியுள்ளன. இங்குள்ள விளை நிலங்களில் முப்போகமும் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்து, நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வது வழக்கம்‌. தற்போது, அரசு சார்பில் அமைக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்களில், அறுவடை செய்த நெற்பயிர்களை கொண்டு செல்வது பெரும் சவாலாக உள்ளது. இதனால், சுற்றுவட்டார கிராமங்களின் மையப் பகுதியாக அமைந்துள்ள தேவரியம்பாக்கம் கிராமத்தில், நெல் கொள்முதல் அமையவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் நெல் பயிரிட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நெல்களை  கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல  அதிகம் செலவாகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தேவரியம்பக்கம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்தால், இங்குள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவர். மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து, நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Paddy Procurement Station ,Thevariyambakkam Village , Paddy Procurement Station at Thevariyambakkam Village: Farmers Expectation
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர்...