தமிழக அரசின் செயல்பாடுகளை குறைகூறுவதற்காகவே அண்ணாமலையை தலைவராக பாஜ தலைமை நியமித்துள்ளது: துரை வைகோ பரபரப்பு பேச்சு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பழைய பஸ் நிலையம் அருகே மதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 50 சதவீதம் நிலக்கரியை கொண்டுதான் மின்சாரம் தயாரிக்க முடியும். கடந்த ஆண்டு நிலக்கரி இறக்குமதியில் ஒன்றிய அரசு பல்வேறு தடைகளை கொண்டு வந்தது. இதையடுத்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து மின்சாரம் தயாரித்தனர். தற்போது கோடைகாலத்தில் 30 சதவீதம் அதிகமாக மின்சாரம் தேவைப்படும். ஆனால், மின் தட்டுப்பாட்டை கொண்டு தவறான பிரசாரங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் மட்டும் மின் தட்டுப்பாடு கிடையாது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் மின்தட்டுப்பாடு தொடர்கிறது. இதை புரிந்துகொள்ளாத தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து குறை கூறி வருகிறார். பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறவேண்டும் என்பதற்காகவே, அவரை மாநில தலைவராக பாஜ தலைமை நியமித்துள்ளது. இதனால் அவர் தமிழக அரசின் செயல்பாடுகள் மீதும், முதல்வர் மீதும் ஏதாவது புகார்களை கூறி கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், அவரது பதவி பறிபோய்விடும் என அண்ணாமலை அச்சப்படுவதாக தோன்றுகிறது என்றார். கூட்டத்தில், துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் பார்த்திபன் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: