புதிய ஓய்வூதியதாரர்கள் இனி குடும்ப ஓய்வூதியம் பெற கணவன், மனைவி இறப்பு சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டும் போதும்: அமைச்சர் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வூதிய கால நன்மைகளும் (நிதித்துறை) மானியக் கோரிக்கையின் போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பு:

* இனிவரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் கணவன்- மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். எனவே, குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் அவர்கள் கணவன்- மனைவியின் இறப்பு சான்றிதழ் மட்டும் சமர்ப்பித்தல் போதுமானதாகும்.

* தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் குடும்பப் பாதுகாப்பு நிதி திட்டம், ஓய்வூதியர்கள் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் ஒரு சுய உதவித் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. ஓய்வூதியதாரர் இறக்கும் நேர்வில், அவரது துணைவர்/நியமனதாரருக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, இறந்த ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களின் கோரிக்கைகளை தீர்வு செய்வதற்கு ஏதுவாக இந்த அரசு ஜூலை 2021ல் ரூ.25 கோடி ஒப்பளிப்பு செய்தது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், நிலுவையிலுள்ள கோரிக்கைகளை தீர்வு செய்வதற்கு ஓய்வூதியதாரர் அளிக்கும் பங்களிப்பு போதுமானதாக இல்லை. ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வரசு, மீண்டும் ரூ.50 கோடியை சிறப்பு நிதியாக ஒதுக்கியுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: