அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய மயிலாப்பூர் ஆடிட்டர் தம்பதி கொன்று புதைப்பு: ரூ.20 லட்சம், நகைகளுடன் தப்பிய கார் டிரைவர், நண்பர் ஆந்திராவில் கைது

சென்னை: சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனி, பிருந்தாவன் தெருவை சேர்ந்த ஆடிட்டர் ரூ.காந்த் (60). இவருடைய மனைவி அனுராதா (55). இருவரும் அமெரிக்காவில் உள்ள தனது மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காக மார்ச் மாதம் அமெரிக்கா சென்றுவிட்டு, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினர். இருவரையும் அவர்களின் கார் ஒட்டுநர் கிருஷ்ணா அழைத்து கொண்டு மயிலாப்பூரில் உள்ள வீட்டில் இறக்கிவிட்டார். இந்நிலையில், தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்களா என்று அறிய அமெரிக்காவில் உள்ள மகள், அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது தந்தை, தாய் இருவரின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் என வந்தது. இதையடுத்து, சந்தேகமடைந்த மகள் சுனந்தா, அடையாறு இந்திரா நகரில் உள்ள தனது உறவினர் திவ்யாவை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறி உள்ளார். இதையடுத்து, திவ்யா தனது கணவர் ரமேஷுடன் பிற்பகல் 12.30 மணியளவில் ஆடிட்டர் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் கதவு பூட்டியிருந்ததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ச்சியடைந்த அவர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மித்தல் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். பின்னர், தனிப்படை அமைத்து மாயமான ஆடிட்டர் தம்பதி மற்றும் டிரைவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், மாலை 6.30 மணியளவில் கார் டிரைவர் கிருஷ்ணா, ஆடிட்டருக்கு சொந்தமான TN 07 AW 7499 என்ற இன்னோவா காரில் தனது சொந்த நாடான நேபாளத்திற்கு ஆந்திரா வழியாக தப்பி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் ஆந்திரா போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் உதவியுடன் ஆந்திர மாநிலம் ஓங்கோல் சோதனை சாவடியில் கார் டிரைவர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், போலீசார் கிருஷ்ணாவிடம் மேற்கொண்ட விசாரணையில், ரூ.காந்த் மற்றும் அனுராதா இருவரையும் மயிலாப்பூர் வீட்டிலேயே கொலை செய்து, பீரோவில் இருந்து ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது. இருவரது உடல்களையும் காரில் ஏற்றி, கிழக்கு கடற்கரை சாலை, நெமிலிசேரியில் உள்ள ரூ.காந்திற்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்று, அங்கு புதைத்துவிட்டு தப்பியதாகவும், இந்த கொலைக்கு ரவி மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, நெமிலிசேரியில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்ற போலீசார், இருவரது உடல்களையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட கிருஷ்ணா, ஆடிட்டர் தம்பதியிடம் கடந்த 11 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: