அரசின் நலத்திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாத ஓபிஎஸ், இபிஎஸ்: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை: அரசின் நலத்திட்டங்களை குறை கூறிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் போன இந்த இரட்டைத் தலைமை இப்போது அனைத்து வகையிலும் பாதுகாப்பான சமூக நல்லிணக்கத்திற்கு ஏற்ற - அமைதியான தமிழ்நாட்டைப் பார்த்து பாஜவின் ஊதுகுழலாக மாறி சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை. சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த ஆட்சியை வழங்கி தமிழ்நாட்டையும் அதன் வளர்ச்சியையும் பின்னுக்குத் தள்ளிய  பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கொடநாடு வழக்கின் “க்ளைமாக்ஸ்” காட்சி நெருங்குவது பற்றிய பயத்திலோ என்னவோ திமுக மீதும்  நல்லாட்சி மீதும் முதலமைச்சர் மீதும் ஆதாரமற்ற அபாண்டமானவெத்து வேட்டு பேட்டி அறிக்கைகளை விட வேண்டாம்.

எங்கள் ஆட்சி துவங்கி ஓராண்டு தான் நிறைவு பெற்றிருக்கிறது. ஆனால் பத்தாண்டு ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளைக காற்றில் பறக்க விட்டுப் போன இரட்டைத் தலைமைக்கு எங்கள் ஆட்சி ஓராண்டிலே நிறைவேற்றி விட்ட வாக்குறுதிகளைப் பொறுத்துக் கொள்ளாமல் இப்படி பொய் புளுகு அறிக்கைகளை வெளியிடுவது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகம். எத்தனைப் பொய்யுரைகளை இந்த இரட்டையர்கள் நிகழ்த்தினாலும் இனி இருக்கப் போவதும் தொடரப்போவதும் திமுக ஆட்சிதான். நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்கள் போல்  அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றிபெறப் போவது திமுக தான் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: