சகோதரிகளுடைய கணவர்களின் அரசு பணியை காரணம் காட்டி பெண்ணுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுக்க முடியாது: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: சகோதரிகளின் கணவர்கள் அரசு பணியில் இருப்பதை காரணம் காட்டி பெண்ணுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க மறுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வி.சுந்தரி தாக்கல் செய்துள்ள மனுவில்,  எனது தந்தை தண்டபாணி கருங்குழி பஞ்சாயத்து யூனியன் தொடக்க பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2000 மார்ச் 9ம் தேதி அவர் பணியில் இருந்தபோது மரணமடைந்தார்.

இதையடுத்து, அவரது வேலையை கருணை அடிப்படையில் எனக்கு தரக்கோரி பள்ளிக்கல்வி துறைக்கு 2001 டிசம்பர் மாதம் மனு அனுப்பினேன். எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனவே, எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சசிகலா ஏ.ராமதாஸ் ஆஜராகி, இறந்துபோன தண்டபாணிக்கு 5 பெண் குழந்தைகள். இவர்களின் ஒப்புதலின் அடிப்படையிலேயே மனுதாரர் கருணை அடிப்படையில் வேலை கேட்டுள்ளார். மனு கொடுத்து 3 ஆண்டுகள் கழித்தே மனுதாரர் திருமணம் செய்துள்ளார். அதனால், அவர் கருணை அடிப்படையில் தந்தையின் வேலையை பெற உரிமை உள்ளது என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் ஆஜராகி வாதிடும்போது, மனுதாரர் மற்றும் அவரது 4 சகோதரிகளுக்கும் திருமணமாகி அவர்களின் கணவர்கள் அரசு பணியில் உள்ளனர். மனுதாரரின் குடும்பம் பொருளாதார ரீதியில் கஷ்டத்தில் இல்லை. எனவே, கருணை அடிப்படையில் மனுதாரர் வேலை கேட்க முடியாது என்று வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரின் தந்தை மரணமடைந்தபோது மனுதாரருக்கு திருமணம் ஆகவில்லை. அவரது மனுவை பள்ளிக்கல்விதுறை நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருந்தது அரசு தரப்பின் தவறாகும். மனுதாரரின் சகோதரிகளின் கணவர்கள் அரசு பணியில் இருப்பதால் கருணை அடிப்படையில் பணி வழங்க கூடாது என்று கூற முடியாது.

இந்திய கலாச்சாரத்தில் திருமணம் என்பது திருமணம் முடிந்தவுடன் பெண்கள் அவர்களின் புகுந்த வீட்டு சென்றுவிடுவதுதான். மனுதாரரின் சகோதரிகளின் கணவர்கள் அரசு பணியில் இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் மனுதாரரை கவனிப்பார்கள் என்று கூறமுடியாது. மனுதாரரின் கணவரும் தற்காலிகமாக அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். எனவே, மனுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி கோர உரிமை உள்ளது. மனுதாரருக்கு கருணை அடிப்படையில் அவரது தகுதிக்கேற்ப 4 வாரங்களுக்குள் பள்ளிக்கல்வி துறை பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: