அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தெலங்கானாவில் தனித்து போட்டி: பொதுக்கூட்டத்தில் ராகுல் அறிவிப்பு

திருமலை: தெலங்கானாவில் 2023ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப்போட்டியிடுவதாக, விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார். தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகளுக்கான பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி கலந்து கொண்டு

பேசியதாவது: சோனியாகாந்தியின் முயற்சியால் தெலங்கானா மாநிலம் உருவானது. கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் தெலங்கானா மாநிலத்தை ஏற்பாடு செய்தார்.  தெலங்கானாவில் மக்கள் ஆட்சி அமையும். விவசாயிகள் மற்றும் ஏழைகளின் அரசு அமையும் என்று நினைத்தேன்.  ஆனால், தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் மன்னராட்சி போன்று  தான் நினைத்ததை செய்கிறார். சட்டீஸ்கரில் காங்கிரஸ் அரசு ரூ.2,500க்கு குவிண்டால் தானியம் கொள்முதல் செய்கிறது. ஆனால், தெலங்கானா முதல்வர் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தெலங்கானா விவசாயிக்கு நியாயமான ஆதரவு விலை கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும். காங்கிரஸ் அரசு வெற்றி பெற்று, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். இது அறிவிப்பு அல்ல. விவசாயிகளுக்கு காங்கிரஸ் கொடுக்கும் உத்தரவாதம். தெலங்கானா அவ்வளவு எளிதில் உருவாகவில்லை. இந்த மாநிலம் தனி நபருக்காக உருவானது அல்ல. இது தெலங்கானா மக்களின் கனவு. தற்போது ஒரே ஒரு குடும்பம் மட்டுமே பயனடைந்துள்ளது. தெலங்கானாவை அடைய இளைஞர்கள் ரத்தம் சிந்தியுள்ளனர். தெலங்கானாவில் 2023ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: