பரிந்துரையை ஏற்றது ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்: முழு பலம் எட்டியது

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்திற்கு கொலிஜியம் பரிந்துரையின்பேரில் 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டதை அடுத்து, 34 நீதிபதிகளுடன் மீண்டும் முழு எண்ணிக்கையை எட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 34. இதில் 2 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருந்தது. இந்நிலையில் அசாமின் கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷூ துலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பர்திவாலா ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமயிலான கொலிஜியம் இரண்டு நாட்களுக்கு முன் பரிந்துரை செய்திருந்தது. கொலிஜியம் பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக சுதன்ஷூ துலியா மற்றும் பர்திவாலா ஆகியோர்  நியமிக்கப்பட்டனர். இது தொடர்பாக அறிக்கையை ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட 34 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் அடுத்த வாரம் பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Stories: