வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறும்: மழையும் பெய்யும், வெயிலும் அதிகரிக்கும்; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக மணமேல்குடி, ஜெயக்கொண்டம் 7 செ.மீ, அதிராம்பட்டினம் 6 செ.மீ, திருத்தணி 5 செ.மீ, கீழ்பென்னாத்தூர் 4 செ.மீ, விரிஞ்சிபுரம், ராயக்கோட்டை, திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீ என மாநிலத்தின் பல இடங்களில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது. ஆனால், சென்னை உள்ளிட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழையும், சில இடங்களில் வெயிலின் தாக்கமும் 2-3 டிகிரி செல்சிஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவியது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது இன்று புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் மாலை வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். பிறகு வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்குவங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

Related Stories: