×

1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி: 6 வயது வரை குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து; ஐந்து திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு சாதனையையொட்டி 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார். அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை, டெல்லியைப்போல தமிழகத்தில் மாடல் பள்ளிகள், 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள், 234 தொகுதியிலும் ‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்’ உள்ளிட்ட 5 அதிரடி அறிவிப்புகளை முதல்வர் அறிவித்துள்ளார். திமுக அரசு பதவி ஏற்று நேற்றுடன் ஓராண்டு முடிகிறது. இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீட்டுக்குச் சென்றார்.

கலைஞரின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசீர்வாதம் வாங்கினார். அங்கிருந்து தலைமை செயலகம் வரும் வழியில், மாநகர பஸ்சில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, தலைமைச் செயலகம் சென்றார். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்து முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து தலைமைச் செயலகம் வாழை மரத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 9.45 மணிக்கு தலைமை செயலக பேரவை மண்டபத்தில் உள்ள அறைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் புத்தகம் மற்றும் சால்வை கொடுத்து வாழ்த்துப் பெற்றனர்.

அதை தொடர்ந்து 9.54 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்தார். அவர் உள்ளே வரும்போது திமுக மற்றும் தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து மேஜையை தட்டி வரவேற்றனர். பின்னர் அனைத்துக் கட்சி சட்டமன்ற கட்சி தலைவர்கள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சரியாக காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. நேற்று கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதால், கூட்டம் தொடங்கியதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிக்கை படிப்பார் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓராண்டு காலத்தில்  தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையுடனும், உளப்பாங்குடனும் உழைத்திருக்கிறேன் என்கிற மனநிறைவோடுதான் இந்த மாமன்றத்தில் நின்றுகொண்டு இருக்கிறேன். நூற்றாண்டு பழமை கொண்ட இந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில்  இத்தகைய மகிழ்ச்சிக்குரிய மனநிலையுடன் என்னை தலைநிமிர்ந்து நிற்க வைத்த கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து என்னை இந்த மாமன்றத்துக்குள் இத்தகைய தகுதியோடு நிற்க வைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. தோழமை கட்சிகளாக  மட்டுமில்லாமல், தோழமை உறவுகளாக எங்களோடு எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கக்கூடிய கட்சி தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. இவர்களால்தான் நான் இங்கு தலைநிமிர்ந்து நிற்கிறேன். அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கையை இந்த ஓராண்டு காலத்தில் காத்து வந்திருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன். ஓராண்டு முடிந்து, இரண்டாவது ஆண்டு தொடங்கும் இந்த மகிழ்ச்சிக்குரிய நாளில் மக்கள் மனம் மகிழும் சில அறிவிப்புகளை வெளியிட இருக்கிறேன். சில மிக முக்கியமான 5  முக்கிய திட்டங்களை இந்த மாமன்றத்திற்கு அறிவிக்கிறேன்.
 
* முதலாவது திட்டம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். நகர பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிக தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய  குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு இந்த திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம். முதற்கட்டமாக, சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்க பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.  இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

* இரண்டாவது திட்டம்: ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பரிசோதித்ததில் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள். வயதுக்கேற்ற எடையும் இல்லை, வயதுக்கேற்ற உயரமும் இல்லை. மிகமிக மெலிந்து இருக்கிறார்கள். 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.  தமிழக குழந்தைகள் அனைவரையும் திடமான, ஊட்டச்சத்து குறைபாடில்லாதவர்களாக மாற்றுவதற்கான திட்டமாக இதனை நாம் வடிவமைத்துள்ளோம்.

* மூன்றாவது திட்டம்: ‘தகைசால் பள்ளிகள்’ என்ற திட்டம். டெல்லியை போல் தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். முதலில், முதற்கட்டமாக ரூ.150 கோடி மதிப்பீட்டில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலை பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். படிப்புடன் சேர்ந்து அவர்களது தனித்திறன்கள் அனைத்தும் வளர்த்தெடுக்கப்படும். அவர்களுடைய ஆளுமைத் திறன் அனைத்தும் மேம்படுத்தப்படும்.

* நான்காவது  திட்டம்: நகர்ப்புற மருத்துவ நிலையங்களை அமைக்கும் திட்டம். முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சி பகுதிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் புதியதாக ஏற்படுத்தப்படும். இந்த மருத்துவ நிலையங்களுக்கு ரூ.180 கோடியே 45 லட்சம் செலவில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும். இந்த 708 புதிய நகர்ப்புற மருத்துவ  நிலையங்களிலும், காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் இரு வேளைகளிலும் புறநோயாளிகள் சேவைகள் செயல்படுத்தப்படும். இந்த மையங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மருத்துவ நிலையங்களிலும் காலையும்  மாலையும் ஏழை எளியோருக்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்து, 2030ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் நல்வாழ்வு எனும் இலக்கினை தமிழ்நாடு எட்டும்.  

* ஐந்தாவது திட்டம்: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டம். 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு வரப்போகிறது. 234 தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசிய தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பரிசீலனை செய்வார்கள். அடுத்து வரும் நிதி ஆண்டுகளில் அவற்றை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், தங்களுடைய தொகுதி மக்களுடைய தேவைகளை அறிந்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் 10 முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை நீங்கள் அளிக்க வேண்டும். அந்த பட்டியலில் இருக்கக்கூடிய  மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை, முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்த பணிகளுக்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  

இந்த திட்டம் நேரடியாக, என்னுடைய கண்காணிப்பிலே நடைபெற போகிறது. எனது கொளத்தூர் தொகுதியாக இருந்தாலும், எதிர்க்கட்சி தலைவரின் எடப்பாடி தொகுதியாக இருந்தாலும், எதிர்க்கட்சி துணைத்தலைவரின் போடி தொகுதியாக இருந்தாலும், அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நடத்தப்படக்கூடிய திட்டங்கள் தீட்டப்படும் என்று உறுதியளிக்கிறேன். ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இரண்டாம் ஆண்டு தொடங்கக்கூடிய இந்நாளில் இத்தகைய 5 மாபெரும் மகத்தான திட்டங்களை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்எல்ஏக்கள் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக),  வானதி சீனிவாசன் (பாஜ), சிந்தனைசெல்வன் (விசிக), நாகைமாலி (மார்க்சிஸ்ட் கம்யூ.), ராமச்சந்திரன் (இந்திய கம்யூ.), சதன்திருமலைகுமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை) ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.

Tags : Chief Minister ,MK Stalin , Daily breakfast for government school students from 1st to 5th class: Nutrition for children up to 6 years; Chief Minister MK Stalin announced five plans
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...