சூரசம்ஹார பயணம் துவக்கிய சசிகலா: எடப்பாடியை ஓரங்கட்டவே வழிபாடு என தகவல்

நாகை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 21ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி அன்று அவர், ஆன்மீக சுற்றுப்பயணத்தை துவக்கினார். முதல்கட்டமாக தஞ்சையில் துவங்கி, திருச்சியில் முடித்தார். தொடர்ந்து ஏப். 11ம் தேதி 2ம் கட்ட ஆன்மீக சுற்றுப் பயணத்தை திருச்சியில் துவங்கி சேலம் ராஜகணபதி கோயிலில் நிறைவு செய்தார்.

தொடர்ந்து கடந்த 26ம் தேதி 3ம் கட்ட ஆன்மீக பயணத்தை துவங்கியபோது, அரசியல் பயணத்தை விரைவில் துவங்குவேன் என்று சூளுரைத்தார். அப்போது திருச்சியிலிருந்து கார் மூலம் நாகை திருக்கடையூர் சென்ற சசிகலா அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தார். அடுத்ததாக கடந்த 26ம் தேதி சிக்கலில் உள்ள சிங்காரவேலர் கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வேளாங்கண்ணி மாதா தேவாலயம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு வழிபாடு செய்து தனது ஆன்மீக பயணத்தை நிறைவு செய்தார்.

இந்நிலையில் இறுதிக்கட்ட ஆன்மீக பயணத்தை நேற்று துவக்கிய சசிகலா சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வந்து,  கார் மூலம் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோயிலுக்கு சென்றார். இந்த கோயிலில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி சசிகலா சாமி தரிசனம் செய்தபோது, பூஜைக்காக செம்பினால் ஆன வேல் வழங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று பகல் 12 மணிக்கு சிக்கல் சிங்காரவேலர் கோயிலுக்கு சசிகலா வந்தார். சிங்கார சண்முகநாதர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்த அவர், வழிபாடு முடிந்த பின்னர் தான் பூஜைக்கு கொடுத்திருந்த வேலை பெற்றுக்கொண்டு கோயிலின் உட்பிரகாரத்தை சுற்றி வந்தார்.பின்னர் அவர் வேலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காணிக்கையாக செலுத்த திருச்செந்தூருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

கந்த சஷ்டி விழாவின்போது திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும். சூரனை வேல் கொண்டு சம்ஹாரம் செய்யும் முருகன், இதற்காக சிக்கலில் உள்ள தனது அன்னையிடம் வெற்றி வேலினை வாங்குவார். இந்த நிகழ்ச்சி கந்த சஷ்டி விழாவின் 5ம் நாளன்று நடைபெறும். இதைத்தான் சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்று கூறுவார்கள். சிக்கலில் வழிபாடு நடத்தினால் சிக்கல்கள் தீரும் என்பது ஐதீகம்.

சசிகலா அதிமுகவில் சேர இப்போது எடப்பாடி பழனிசாமி தடையாக உள்ளார். எனவே விரைவில் அரசியல் பயணத்தை துவங்கவிருக்கும் சசிகலா தனது அரசியல் எதிரிகள் மற்றும் துரோகிகளின் சதித்திட்டங்களை சுக்குநூறாக தகர்ந்தெறிந்து, நினைத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்காகவே அவர் சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூர் செல்கிறார் என சகிகலாவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: